முல்லை பெரியாறு விவகாரம் : பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அணை பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை சமாளிப்பது பற்றிய ஆய்வுக் குழு ஒன்றை பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்திருப்பதற்கு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டியுள்ள அவர், உச்சநீதிமன்ற ஐவர் குழு தற்போது ஆய்வு நடத்தி வருவதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என ஐவர் குழுவை அறிக்கை அளிக்கச் செய்வதே கேரள அரசின் நோக்கம் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோன்று ரூர்கி ஐ.ஐ.டி பேராசிரியர் பாலை முல்லைப் பெரியாறு அணை வழக்கில் சாட்சியாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அவரை அவசரகால ஆய்வுக் குழுவில் தற்போது சேர்த்திருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பாலை குழுவில் சேர்த்திருப்பதன் மூலம் கேரளாவுக்கு ஆதரவான நடவடிக்கையை அவர் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு மற்றும் ஐவர் குழு ஆய்வு செய்துவருவதை குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, தற்போது அவசரகால மேலாண்மை ஆய்வு குழு தேவையற்றது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் குழு அமைப்பதற்கான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் பிரதமரை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment